உங்கள் குட்டிப் பாப்பாவின் சிரிப்பைப் பார்க்கும்போது கிடைக்கும் ஆனந்தம் மிகவும் அற்புதமானது. அந்தப் புன்னகை ஆயுளுக்கும் தொடர வேண்டும் என்பது தானே நம் எல்லோருடைய ஆசையும்.
ஆனால், நம்மில் பலரும் செய்யும் ஒரு பொதுவான தவறு, “பால் பற்கள் தானே, விழுந்து முளைத்து விடும்” என்று குழந்தைப் பல் பராமரிப்பு (baby dental care) விஷயத்தில் கொஞ்சம் அலட்சியமாக இருப்பதுதான். உண்மையில், இந்தப் பால் பற்கள் தான் பின்னால் வரப்போகும் நிரந்தரப் பற்களுக்குச் சரியான வழிகாட்டி. ஒரு நல்ல அஸ்திவாரம் போல!
பெற்றோராக, குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு (dental care for children) முறையைச் சரியாகத் தேர்ந்தெடுப்பது ஒரு சின்ன குழப்பமாக இருக்கலாம். ஆனால் கவலை வேண்டாம். சரியான நேரத்தில் தொடங்கும் கவனிப்பு, பிற்காலத்தில் வரும் பெரிய செலவுகளையும், வலிகளையும் தடுக்கும். சொல்லப்போனால், ஆரம்பக்கட்ட கவனிப்பால் பெரும்பாலான பல் பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்!
இந்த வழிகாட்டியில், உங்கள் செல்லக் குழந்தைக்கு ஆரோக்கியமான வாய்வழி சுகாதாரப் பழக்கங்களை எளிமையாக எப்படி ஏற்படுத்துவது என்று படிப்படியாகப் பார்க்கலாம்.
நம்முடைய முதல் படி, பற்கள் முளைப்பதற்கு முன்பிருந்தே ஈறுகளைப் பராமரிப்பது தான். இது நமக்குக் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கும், அது எப்படின்னு இப்போ பார்க்கலாம்.
பல் முளைக்கும் முன்பே தொடங்கும் பாதுகாப்பு!
‘பல் முளைத்தால் தானே பல் துளக்கணும்’ என்று நினைக்க வேண்டாம். உங்கள் குழந்தையின் முதல் பல் எட்டிப் பார்ப்பதற்கு முன்பே, குழந்தைப் பல் பராமரிப்பு (baby dental care) வேலையைத் தொடங்கி விட வேண்டும்.
ஏன் இவ்வளவு அவசரம் என்கிறீர்களா? பெரியவர்களைப் போலவே, குழந்தைகளின் ஈறுகளிலும் எதிரி பாக்டீரியாக்கள் ஒரு படையையே உருவாக்கும். நாளடைவில், இது ‘காரை’ (Plaque) எனப்படும் ஒரு படலமாக மாறி, பின்னால் வரப்போகும் நிரந்தரப் பற்களுக்கு அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைத்து விடும்.
நாம்தான் ஒரு நாளைக்குக் குழந்தையை ஒரு நூறு தடவையாவது கொஞ்சி, முத்தமிடுகிறோமே! கூடவே இந்த ஒரு சின்ன வேலையையும் சேர்த்துக்கொண்டால், பிற்காலத்தில் வரக்கூடிய பல் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.
சரி, இதை எப்படிச் செய்வது என்று தெரிஞ்சுகொள்ளலாம், இந்த விஷயம் ரொம்ப எளிமையானது.
ஒவ்வொரு முறைக் குழந்தைச் சாப்பிட்ட பிறகும், குறிப்பாக இரவு தூங்க வைப்பதற்கு முன்பும், இதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். முதலில் உங்கள் கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள். பிறகு, ஒரு சுத்தமான, மெல்லிய துணி அல்லது மருந்துக் கடைகளில் கிடைக்கும் காஸ் (gauze) துணியை எடுத்து, தண்ணீரில் நனைத்து லேசாகப் பிழிந்து கொள்ளுங்கள். அதை உங்கள் ஆள்காட்டி விரலில் சுற்றி, குழந்தையின் ஈறுகள், நாக்கு, கன்னத்தின் உட்புறம் என எல்லா இடங்களையும் மிக மென்மையாகத் துடைத்து விடுங்கள். அவ்வளவுதான்!
இந்த எளிய பயிற்சி, பிற்காலத்தில் குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு முறைகளை, அதாவது பல் துலக்குதலை, அவர்கள் அடம்பிடிக்காமல் இயல்பாக ஏற்றுக்கொள்வதற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமையும்.
சரி, இப்போது ஈறுகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது எப்படி என்று தெரிந்துவிட்டது. அடுத்த நிலை என்ன? அந்த முதல் முத்து மெல்ல எட்டிப் பார்க்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
முதல் முத்து… முதல் பல் துலக்கல்! ஆரம்பமாகும் புதிய அத்தியாயம்
காத்திருப்பின் கடைசி நொடியில், ஈறுகளுக்குள் இருந்து அந்த முதல் முத்து எட்டிப் பார்க்கும் தருணம் மிகவும் அற்புதம்! இந்த முதல் பல் வெடிப்பு (‘First tooth eruption’) நிகழ்வோடு தான், உண்மையான குழந்தைப் பல் பராமரிப்பு சவால் ஆரம்பிக்கிறது. உடனடியாக நாம் களத்தில் இறங்கி, குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்மையானகுழந்தைகளுக்குப் பாதுகாப்பான பல் துலக்கி (‘Baby-safe toothbrush’) மற்றும் ஃப்ளூரைடு பற்பசை (‘Fluoride toothpaste’) ஆகியவற்றை அறிமுகப்படுத்த வேண்டும்.
ஆனால், எவ்வளவு பற்பசைப் பயன்படுத்த வேண்டும் என்று இங்கே ஒரு சின்ன கணக்கு இருக்கிறது. மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு, ஒரு அரிசி மணி அளவு (Rice grain-sized amount of toothpaste) போதும். அதுவே மூன்று வயதைக் கடந்த குழந்தைகளுக்கு, ஒரு பட்டாணி அளவு (Pea-sized amount of toothpaste) சரியானதாக இருக்கும். அளவு ரொம்ப முக்கியம்!
இனி பல் துலக்குதல் (Brushing teeth) செய்யும் முறை. பற்களின் மேலும், கீழும், உள்ளே, வெளியேயென எல்லாப் பக்கங்களிலும், ஈறுகளை ஒட்டிய பகுதிகளிலும் மெதுவாக, கோலம் போடுவது போல மென்மையான வட்ட துலக்குதல் இயக்கங்களில் (Gentle circular brushing motions) சுழற்ற வேண்டும். முன்னும் பின்னுமாக ராக்கெட் வேகத்தில் தேய்த்தால், அவர்களின் பிஞ்சுப் பற்களும், மென்மையான ஈறுகளும் பாவம், காயப்பட்டு விடும். கடைசியாக, நாக்கையும் ஒரு தடவை மென்மையாக வருடி விட மறக்காதீர்கள்.
நன்றாகத்தான் சொல்கிறீர்கள், ஆனால் என் குழந்தைப் பல் துலக்கிய பார்த்தாலே தெறித்து ஓடுகிறதே என்றுதானே நினைக்கிறீர்கள். அது சகஜம்தான். இந்த நேரத்தை ஒரு போர்க்களமாக மாற்றாமல், பல் பராமரிப்பை ஒரு வேடிக்கையான வழக்கமாக (Making dental care a fun routine) மாற்றுவது பெற்றோர், தாத்தா பாட்டிகள் ஆகிய நம் கைகளில்தான் இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்த பாட்டைப் போடுவது, பல் துலக்குவதை ஒரு ஜாலியான விளையாட்டாக மாற்றுவது, அவர்களையே பல் துலக்கிய தேர்ந்தெடுக்க வைப்பது, சரியாகச் செய்தால் ஒரு சின்ன பாராட்டு என இப்படிச் சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும்.
இப்போது, சரியான முறையில் பல் துலக்குவது பற்றித் தெரிந்து கொண்டோம். ஆனால், குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு என்பது வெறும் பல் துலக்கியில் மட்டும் முடிந்துவிடுவதில்லை. பற்களைப் பாதிக்கக்கூடிய பாக்டீரியாக்களுக்குப் பிடித்தமான இனிப்புகளைக் கட்டுப்படுத்துவதும் முக்கியம். அடுத்ததாகக் குழந்தைகளின் உணவுப் பழக்கத்தைப் பற்றிப் பார்ப்போம்.
மேலும் வாசிக்க : ஈறுகளில் ரத்தமா? எச்சரிக்கை மணி அடித்தாகிவிட்டது!
பற்களின் எதிரியும் நண்பனும்… உங்கள் சமையலறையில் தான்!
பல் துலக்கியால் மட்டும் உண்டாக்கக்கூடிய பாக்டீரியாக்களை வீழ்த்திவிட வாய்ப்பே இல்லை. போர்க்களத்தில் எதிரிக்குச் செல்லும் சாப்பாட்டு விநியோகத்தை நிறுத்துவது போல, நாம் அவற்றின் உணவுச் சங்கிலியை உடைத்தால் தான், இந்தக் குழந்தைப் பல் பராமரிப்பு போரில் நமக்கு முழு வெற்றிக் கிடைக்கும். ஊட்டச்சத்து மற்றும் வாய்வழி ஆரோக்கியம் (Nutrition and oral health) இரட்டைக் குழந்தைகள் மாதிரி, பிரிக்கவே முடியாது.
எப்போதெல்லாம் நம் குழந்தைச் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை (Sugary foods and drinks) சாப்பிடுகிறதோ, அப்போதெல்லாம் வாயில் ஒளிந்திருக்கும் பாக்டீரியா (Bacteria) படைக்கு ஒரு பெரிய விருந்தினைப் போன்ற கொண்டாட்டம்தான். அந்த விருந்தின் முடிவில் அவை வெளியிடும் ஒரு வித கழிவுதான் அமிலம் (Acid). இந்த அமிலம் பற்களின் எனாமலைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்து, பல் சிதைவு (Tooth decay) என்ற பெரிய பிரச்சனைக்குச் சத்தம் இல்லாமல் அஸ்திவாரம் போடுகிறது. குறிப்பாக, பற்களில் ‘ஃபெவிகால்’ போட்டதுபோல ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான மிட்டாய்கள் இந்தப் பாக்டீரியாக்களுக்கு மிகவும் பிடித்தமான தங்கும் இடமாகும்.
‘என் குழந்தைப் பாட்டில் இல்லாமல் தூங்காதே!’ என்று நீங்கள் பதறுவது புரிகிறது. இது பலரும் சந்திக்கும் யதார்த்தமான பிரச்சினைதான். ஆனால், குழந்தையின் முதல் பிறந்தநாளுக்குள், அதாவது 12 மாதங்கள் ஆகும்போதே, மெல்ல மெல்லப் பாட்டிலிலிருந்து கோப்பைக்கு மாற்றுவது (Weaning from a bottle to a cup) மிக அவசியம். இரவு முழுவதும் பால் பாட்டில் வாயில் இருப்பது, பற்களை அமிலத்தில் ஊற வைப்பதற்குச் சமம். இது பிற்காலத்தில் தீவிரமான பல் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
சரி, எதைத்தான் கொடுப்பது, இங்கேதான் நம் சமையலறை ஒரு சிறந்த இடமாக மாறுகிறது. கால்சியம் நிறைந்த உணவுகள் (Calcium-rich foods) சீஸ், தயிர் (Yogurt), மொறுமொறுப்பான கேரட், ஆப்பிள் துண்டுகள் போன்றவைப் பற்களுக்கு உடற்பயிற்சி கொடுப்பதோடு, அவற்றை வலுப்படுத்தவும் செய்யும். நம்மூரில் பாசத்தைக் காட்ட சாக்லேட்டும், பிஸ்கட்டும் கொடுப்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது. குறிப்பாகத் தாத்தா பாட்டிகள்! பேரன்பைக் காட்ட மிட்டாய் தான் வேண்டும் என்பதில்லை. அதற்குப் பதிலாக, வன்மயமான பழத்துண்டுகளைக் கொடுப்பது அன்பையும் ஆரோக்கியத்தையும் ஒருசேரக் கொடுக்கும்.
சரி பல் துலக்குதல் செய்வது, உணவுப் பழக்கம் எனக் குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு விஷயத்தில் இரண்டு முக்கிய கோட்டைகளைப் பிடித்துவிட்டோம். நம்முடைய அடுத்தகட்ட செயல்பாடு என்ன? முதல் முறையாகப் பல் மருத்துவரை எப்போது சந்திப்பது? அதைப் பற்றி அடுத்ததாக விரிவாகப் பார்ப்போம்.

பல் மருத்துவரைப் பார்க்கப் பயம் எதற்கு ?
பல் துலக்குதல் பண்ணியாச்சு, சத்தான உணவுகளையும் அறிமுகப்படுத்தியாச்சு. நம்முடைய குழந்தைப் பல் பராமரிப்பு செயல்முறையில் அடுத்த முக்கியமான கட்டம் என்னவென்றால், அது தான் முதல் பல் மருத்துவ சந்திப்பு (First dentist appointment).
‘அதற்குள் என்ன அவசரம்?’ என்று நினைக்க வேண்டாம். அமெரிக்கப் பல் மருத்துவ சங்கம் (ADA) என்ன சொல்கிறது என்றால் குழந்தையின் முதல் பல் முளைத்த ஆறு மாதங்களுக்குள் அல்லது முதல் பிறந்தநாள் கேக் வெட்டுவதற்கு முன்பே இந்தச் சந்திப்பு நடக்க வேண்டுமாம். இது வெறும் பரிசோதனை இல்லை; பின்னாளில் வரக்கூடிய பெரிய பிரச்சனைகளுக்கு ஒரு முன் ஜாமீன் வாங்குவது போல! ஒரு நல்ல குழந்தைப் பல் மருத்துவர் (Pediatric dentist), தேவைப்பட்டால், பற்களைப் பாதுகாக்கச் சீலன்ட் (Sealants) அல்லது ஃப்ளூரைடு (Fluoride) சிகிச்சைகளையும் பரிந்துரைப்பார்.
ஆனால், ‘பல் மருத்துவர்’ என்றாலே பெரியவர்களான நமக்கே லேசாக ஒரு உதறல் எடுக்கும்போது, குழந்தைகளுக்குப் பல் மருத்துவர்மீதான பயம் (Dental anxiety/fear) வருவது சகஜம் தானே. இந்தப் பயத்தை மேலும் மேலும் அதிகப்படுத்தாமல், ஒரு ஜாலியான அனுபவமாக மாற்றுவதில் பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டிகள் ஆகிய நம்முடைய பங்கு தான் மிக முக்கியம்.
அதற்குச் சில எளிமையான வழிகள் இங்கே:
முதலில், நீங்களே அந்த இடத்தை ஒரு பயங்கரமான இடமாக நினைக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு பல் மருத்துவர் விளையாட்டு (Role-playing a dentist visit) விளையாடலாம். நீங்கள் மருத்துவர், குழந்தை நோயாளி, “ஆ காட்டுங்க, சூப்பர்… இப்போ இந்தக் கண்ணாடியில பல்லைப் பார்க்கலாமா?” என்று பேசி விளையாடும்போது, நிஜமான சந்திப்பு அவர்களுக்கு அத்துப்படி ஆகிவிடும்.
சந்திப்பு முடிந்து வெளியே வந்ததும், ‘என் ராஜா/ராணி எவ்வளவு தைரியமா இருந்தாங்க!’ என்று ஒரு மனமார்ந்த பாராட்டு கொடுத்தல் மிகவும் அவசியம். இதுதான் நேர்மறை வலுவூட்டல் (Positive reinforcement) என்பது. இது அவர்களின் தன்னம்பிக்கையை ராக்கெட் வேகத்தில் எகிற வைக்கும்.
குறிப்பாக, நம் வீட்டு தாத்தா பாட்டிகள்! பேரன்பைக் காட்ட, தங்கள் காலத்துத் திகில் கதைகளைச் சொல்லிக் குழந்தைகளை மிரட்டாமல், “நாங்கெல்லாம் மருத்துவர்க் கிட்ட போனப்போ, அவங்க ஒரு எங்களை நாற்காலில உட்கார வெச்சு மேஜிக் காட்டுனாங்க” என்று ஒரு நிர்மறையான கதையைப் பகிர்ந்து கொண்டால் போதும், குழந்தையின் பாதி பயம் பஞ்சாகப் பறந்துவிடும்.
ஆக, முதல் பல் மருத்துவ சந்திப்பை ஒரு பயங்கரமான நிகழ்வாகப் பார்க்காமல், குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு பழக்கத்தின் ஒரு இயல்பான பகுதியாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது. இந்த முதல் படியை வெற்றிகரமாக எடுத்து வைத்து விட்டால், ஆயுளுக்கும் நீடிக்கும் ஆரோக்கியமான புன்னகைக்கு நாம் போட்ட அஸ்திவாரம் இன்னும் பலமாகி விடும்.
புன்னகைக்கு ஒரு ப்ளூபிரிண்ட்!
நாம் இதுவரைப் பேசிய விஷயங்களை ஒருமுறைத் திருப்புதல் செய்து பார்த்தால், ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. ஈறுகளைத் துடைப்பதில் தொடங்கி, முதல் பல் மருத்துவ சந்திப்புவரை, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சின்ன அடியும், உங்கள் குழந்தையின் எதிர்காலப் புன்னகைக்கு நாம் போடும் ஒரு வலுவான ப்ளூபிரிண்ட். இதுதான் உண்மையான தடுப்பு பராமரிப்பு (Preventive care).
சரியான நேரத்தில் தொடங்கும் இந்த ஆரம்பகால தலையீடு (Early intervention) மற்றும் சிறு வயதிலேயே நாம் பழக்கும் நல்ல வாய்வழி சுகாதாரப் பழக்கங்கள் (Good oral hygiene habits) பிற்காலத்தில் வரக்கூடிய பல் வலி, சொத்தையெனப் பெரிய செலவு வைக்கும் எதிரிகளை வாசலோடு தடுத்து நிறுத்திவிடும். நினைவிருக்கட்டும், இந்த எளிய அக்கறைதான் சுமார் 80% பல் பிரச்சனைகளை வராமலே தடுத்து விடுகிறது.
பெற்றோர் என்ற முறையில், நம் கையைப் பிடித்துத்தானே நம் குழந்தை நடைப் பழகுகிறது. இந்தக் குழந்தைப் பல் பராமரிப்பு பயணமும் அப்படித்தான். இது ஏதோ பெரிய சவால் இல்லை. மாறாகத் தொடர்ச்சியான, சின்ன சின்ன கவனிப்புகள் தான் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய வாழ்நாள் வாய்வழி ஆரோக்கியம் (Lifelong oral health) என்ற விலைமதிப்பில்லாத சொத்து. குழந்தைகளுக்குப் பல் பராமரிப்பு விஷயத்தில் நம்பிக்கையுடன் இந்த அஸ்திவாரத்தை இன்றே அமைப்போம்.

