
காலநிலை மாறும்போதும், காத்துல கொஞ்சம் குளிர் ஏறும்போதும் நம்ம வீட்டுல குழந்தைங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் வரும் ஒரு பொதுவான பிரச்சனைதான் இந்த சளி, இருமல், காய்ச்சல். இதெல்லாம் நமக்கு ரொம்ப சாதாரணமா தோணினாலும், நம்மள ஒரு ரெண்டு நாளைக்கு மொத்தமா முடக்கிப்போட்டு, படிக்கைல படுக்க வெச்சிடும். அதுலயும் பெரியவங்களான நமக்கு வருஷத்துக்கு இரண்டுலருந்து நாலு தடவை வரை சளி பிடிச்சா, குழந்தைங்களுக்கு ஆறுலருந்து பத்து தடவை வரை சளி பிடிக்குமாம். இதுக்குக் காரணம், அவங்களோட நோய் எதிர்ப்பு அமைப்பு இன்னும் முழுசா வளர்ந்துருக்காது. அதுமட்டுமில்லாம அவங்க பள்ளிக்கூடத்துல மத்த குழந்தைங்களோட ரொம்ப நெருக்கமா விளையாடுறதும் ஒரு காரணம்னு சொல்றாங்க.
குளிர்காலத்துல சளி அதிகமாகப் பரவுறதுக்குக் காரணம், நாம அதிகமா வீட்டுக்குள்ளயே இருக்கிறதுதான். அப்போ வைரஸ் எளிமையா ஒருத்தர் கிட்ட இருந்து இன்னொருத்தருக்குப் பரவும். அதுமட்டுமில்லாம, காத்துல ஈரப்பதம் கம்மியா இருக்குறதால, நம்ம மூக்கு வறண்டு போய், வைரஸ் உள்ள நுழைய வழி வகுத்துடும். “சளிதானே”ன்னு நாம சாதாரணமா நினைக்கிறதுக்கு பின்னால, நம்ம உடம்புக்குள்ள அது ஒரு பெரிய யுத்தமே நடந்துட்டு இருக்கு.
இந்தக் கட்டுரைல, இந்த சளி, இருமல், காய்ச்சல்ன்னா என்ன, இதெல்லாம் யாருக்கு வரும், எப்போ வரும், நாம எப்போ உஷாராகி மருத்துவர அவசியம் பார்க்கணும், எந்தெந்த அறிகுறிகள நாம கவனிக்கணும்னு எல்லாத்தையும் பாக்கப் போறோம்.
சளிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வைரஸ் கூட்டம்
சளி ஏற்படும் போது, முதலில் மூக்குல அடைப்பு ஏற்படலாம். தொண்டை ஓரம் கரகரப்பாக இருந்து, சில நேரங்களில் குரலிலும் மாற்றம் காணப்படலாம். இதோட, கொஞ்சம் உடல் வலியும், சில நேரங்களில் குறைந்த அளவிலான காய்ச்சலும் கூட இருக்கலாம்.
முதல்ல ஒண்ணு புரிஞ்சுக்கோங்க. நாம மழையில நனையறதுனாலயோ, ஐஸ்கிரீம் சாப்புடுறதுனாலயோ சளி பிடிக்கிறதில்லை. சளி பிடிக்க ஒரே காரணம் வைரஸ்! நம்மள பாடாய்படுத்துறதுக்கு ஒரு வைரஸ் இல்லை, சுமார் 200-க்கும் மேற்பட்ட வைரஸ்கள் காத்துட்டு இருக்கு. ஆனா, இதுல முக்கியமானது எதுன்னா, “ரைனோவைரஸ்” (Rhinovirus) தான். பெரும்பாலான சளிக்கு இதான் காரணம்.
இந்த வைரஸ் காத்துல பறந்து வந்தோ இல்ல ஏற்கனவே சளிப்பிடிச்சுருக்கிற ஒருத்தர தொடுறதுனாலயோ ரொம்ப எளிமையா பரவுது. சளி பிடிச்ச ஒருத்தர் தும்மும்போதோ, இருமும்போதோ, ஏன் சத்தமா பேசும்போது கூட, லட்சக்கணக்கான கண்ணுக்குத் தெரியாத நீர்த்திவலைகள் காத்துல பறக்கும். அதுல இந்த வைரஸ் சவாரி செஞ்சு, நம்ம சுவாசத்து வழியா உள்ளே புகுந்துடும். சில நேரங்கள்ல எகனாவே சளியால பாதிக்கப்பட்டவங்க பயன்படுத்தின கைபேசி, கதவு கைப்பிடி, கணினி கம்ப்யூட்டர் கீபோர்டுன்னு எதையாவது தொட்டுட்டு, நாம நம்ம கண்ணு, மூக்கு, வாயைத் தொட்டா, வைரஸுக்கு நம்ம உடம்புக்குள்ள நுழைய ஒரு வழி கிடைச்ச மாதிரிதான். இந்த ரைனோவைரஸ் நம்ம கைல இல்லாம, பொருட்கள் மேல கூட சுமார் மூணு மணி நேரம் வரைக்கும் உயிரோட இருக்க முடியும்னு சொல்றாங்க.
உடம்புக்குள்ள நடக்குற போர்! – சளியின் மூன்று கட்டங்கள், இருமல் காய்ச்சல்
வைரஸ் உள்ள வந்த உடனே நமக்கு அறிகுறிகள் தெரியாது. அது நம்ம உடம்புக்குள்ள தங்கி, செயல்பட தொடங்கவே குறைஞ்சது இரண்டுல இருந்து மூணு நாள் வரை ஆகும்.
சளியை மூணு நிலைகளா பிரிக்கலாம். முதல் நிலைங்கறது ஆரம்பக்கட்டம், அதாவது வைரஸ் நம்ம உடலுக்குள்ள நுழைஞ்ச முதல் மூன்று நாட்கள். இந்த மூன்று நாட்கள்ல, முதல்ல தொண்டையில ஒரு மாதிரி கரகரப்பா, உறுத்தலா இருக்கும். இதுதான் முதல் அறிகுறி. அடுத்தது தும்மல், நம்ம உடம்புக்குள்ள தேவையில்லாம நுழைஞ்ச இந்த வைரஸ வெளியேத்த உடம்பு முயற்சிபண்ணும். அப்படி வைரஸ உடம்புல இருந்து வெளியேத்த நம்ம உடம்பு போராடுற போராட்டம் தான் தும்மல். அப்பறம் நம்ம மூக்குல இருந்து தண்ணி மாதிரி கொட்டத்தொடங்கும். இதெல்லாம் வெறும் ஆரம்பம் தான்.
அடுத்து இரண்டாவது நிலை, அதாவது வைரஸ் நம்ம உடம்புக்குள்ள வந்து நாலு முதல் ஏழு நாள் வரை. இந்த நிலைல தான் மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சு விட முடியாம ராத்திரி நேரத்துல வாய் வழியா மூச்சு விட்டு கஷ்டப்படுவோம். மூக்குல இருந்து வந்த தண்ணி இப்போ கெட்டியாகி, மஞ்சள் அல்லது பச்சை கலர்ல மாறும். கலரப் பாத்து பயப்பட வேண்டாம். இது நம்ம உடம்போட வெள்ளை அணுக்கள் வைரஸோட சண்டை போடுறதுக்கான அடையாளம். அதுமட்டுமில்லாம லேசா உடம்பு வழி தலை பாரமா இருக்கிற மாதிரியான உணர்வு எல்லாம் இந்த இருக்கும்.
வைரஸ் நம்ம உடம்புக்குள்ள வந்து எட்டு முதல் பத்து நாட்கள் வரையான நிலைதான் மூணாவது நிலை. இப்போ அறிகுறிகள் எல்லாம் மெதுவா குறைய ஆரம்பிக்கும். ஆனா, அந்த விடாப்பிடியான இருமல் மட்டும் இன்னும் சில நாளைக்கு, சில சமயம் சில வாரங்களுக்கு நம்ம கூடவே இருக்கும்.
இந்த இருமல உலர்ந்த இருமல், ஈரமான இருமல்னு இரண்டு வகையா பிரிக்கலாம். உலர்ந்த இருமல்றது பொதுவாக தொண்டையில் ஒரு மாதிரி அரிப்பு ஏற்படும் நிலையாகும். இது பெரும்பாலும் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. ஈரமான இருமல்னா இரும்பும் போது சளியும் கூட இருக்கும். இது பாக்டீரியா மாதிரியான நுண்ணுயிரிகள் காரணமா அடிக்கடி வரும்.
இந்த காய்ச்சல் வந்தா, நம்ம உடல் வெப்பம் 100.4°F-ஐ விட அதிகமாகும். ஒருத்தருக்கு அதிக வியர்வை ஏற்படும். உடல் முழுவதும் வலியும், சோர்வும் இருக்கும். அதே நேரத்தில் தலைவலி வரும், இன்னும் சில பேருக்கு மன அழுத்தம் கூட ஏற்படலாம்.
சளி, இருமல், காய்ச்சல்னு மூனும் ஒரே நேரத்தில் வந்தா அது சாதாரண குளிர் தொற்றுக்கான (common cold) அடையாளமாக கூட இருக்கலாம். ஆனா சில நேரங்கள்ல இது வேற மாதிரியான உடல் கோளாறுகளுக்கும் வழிவகுக்கும். உதாரணமா, சைனசைட்டிஸ் மாதிரியான நோயில முகத்தில் வலி வந்து, மூக்கில் அடைப்பு இருக்கும். நிமோனியா வந்தா மார்பு திணறல், அதிக காய்ச்சல், மூச்சு திணறல் ஏற்படலாம். இன்ஃலூயன்சா போன்ற காய்ச்சல்ல திடீர்னு உடல் தாழ்வு ஏற்பட்டு, தசைகள்ல வலியும் தலைசுற்றலும் ஏற்பட வாய்ப்பு இருக்கு. அஸ்துமா உள்ளவங்களுக்கு சளியோட இருமல், மூச்சு விட சிரமப்படுறது அப்பறம் சில சமயங்கள்ல வீக்கம் எல்லாம் ஏற்படலாம்.
எது எச்சரிக்கை மணி! – எப்போ மருத்துவ உதவி தேடி மருத்துவர்கிட்ட போகணும்
இது ரொம்ப முக்கியமான பகுதி. சளி, இருமல், காய்ச்சல் வந்திருக்கும் போது வீட்டிலேயே ஓய்வெடுத்து குணமாக்கலாமான்னு நாம நினைக்கிறோம். ஆனா சில சந்தர்ப்பங்கள்ல உடனடியாக மருத்துவர அணுகுவது அவசியம். சளி சாதாரணமானதுதான். ஆனா, சில அறிகுறிகள் வந்தா, அதை “சும்மா சளிதானே”ன்னு அசால்ட்டா விடவே கூடாது. உடனே மருத்துவர்கிட்ட போகணும்.
மருத்துவ உதவியை நாட வேண்டிய முக்கியமான அறிகுறிகள் என்னென்னனா:
- மூணு நாளைக்கு மேல காய்ச்சல்: காய்ச்சல் 101.3°F (38.5°C) க்கு மேல அடிக்குது, மூணு நாளாகியும் குறையவே இல்லைன்னா, அது சாதாரண சளியைத் தாண்டி வேற ஏதோ சீரியஸான தொற்றா இருக்கலாம்.
- மூச்சுத் திணறல்: மூச்சு விட ரொம்ப கஷ்டமா இருந்தாலோ, நெஞ்சுல வலி வந்தாலோ, உடனே ஆஸ்பத்திரிக்குப் போகணும். இது நிமோனியா மாதிரி தீவிரமான பிரச்சனையோட அறிகுறியா இருக்கலாம்.
- தாங்க முடியாத வலி: தலைவலியோ, தொண்டை வலியோ, காது வலியோ தாங்கவே முடியாத அளவுக்கு இருந்தா, அது சைனஸ் அல்லது காதுல பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம்.
- 10 நாளைக்கு மேல நீடிச்சா: பத்து நாளைக்கு மேலயும் அறிகுறிகள் குறையாம, இன்னும் மோசமாகிட்டே போனா, ஒரு மருத்துவர பாக்குறது ரொம்ப அவசியம்.
- மயக்கம் அல்லது குழப்பம்: ரொம்ப சோர்வா, தலை சுத்தி, ஒரு மாதிரி மனக் குழப்பத்தோட இருந்தா, அதுவும் ஆபத்தான அறிகுறிதான்.
- காய்ச்சல் வந்துட்டுப் போனா: காய்ச்சல் ஒரு நாள் விட்டு விட்டு வந்தா, அதுவும் கவனிக்க வேண்டிய விஷயம்.
- மேலும் சில: மார்பு வலி, இரத்தம் கலந்த சளி, அப்பறம் சிறுநீர் வெளியேறும் அளவு குறைவாக இருக்கும்போதெல்லாம் மருத்துவ ஆலோசனை அவசியமா தேவப்படுது.
- குழந்தைகளுக்கு: நுரை போன்ற சளி வந்தாலோ, சாப்பாடு முழுமையாக மறுக்கும்போதோ இல்லைனா தொடர்ந்து தூக்கமாக இருந்தாலோ மருத்துவரை அனுகனும்.
வீட்டிலேயே என்ன செய்யலாம்? எப்படி பராமரிக்கலாம்
உடல்ல சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்ட, உடனே மருத்துவமனைக்குப் போகாம வீட்டுலயே சில வழிகளால பராமரிக்கலாம்.
முதல்ல, உடல் தண்ணீர இழக்காம இருக்க நிறைய தண்ணி குடிக்கணும். வெதுவெதுப்பான தண்ணி, சூப், கஞ்சி, மஞ்சள் பால், காஷாயம், துளசி தண்ணி, இஞ்சி டீன்னு முடிஞ்ச அளவுக்கு குடிங்க. இது சளியை இளக்கி வெளியேத்த உதவும், உடம்பையும் வறண்டு போகாம பாத்துக்கும்.
வெதுவெதுப்பான தண்ணியில கொஞ்சம் உப்புப் போட்டு தொண்டையில படுற மாதிரி வாய் கொப்பளிச்சா, தொண்டை வலிக்கு கொஞ்சம் இதமா இருக்கும். மூக்கடைப்பு இருந்தா நல்லா சூடா ஆவி பிடிங்க. அடைப்பு நீங்கி, மூச்சு விட எளிமையா இருக்கும்.
இஞ்சி தேனுடன் சேர்த்து குடிப்பது இருமலுக்கு நல்லது. மிளகைப் போட்டு தயாரிக்கும் சூப்புகள் உடலை சூடுபடுத்தி நோய்களுக்கு எதிராக சக்தியை ஏற்படுத்தும். மஞ்சள் பால் காய்ச்சலுக்கு நலம் தரும். துளசி இலைகளை கொதிக்க வைத்து குடிப்பது தொண்டை வலிக்கு சிறந்த மருந்தாக வேலை செய்யும்.
வேலை, பதட்டம்ன்னு எல்லாத்தையும் ஓரங்கட்டிட்டு, உடம்புக்கு முழுசா ஓய்வு கொடுங்க. அப்போதான் உங்க நோய் எதிப்பு அமைப்பு முழு பலத்தோட உங்களுக்காக போராடி உங்கள நோயில இருந்து மீட் டு எடுக்கும். அப்பறம் நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க, சளிக்கு ஆன்டிபயாடிக் (Antibiotic) மாத்திரை வேலை செய்யாது. ஏன்னா, சளி ஒரு வைரஸால வருது, ஆன்டிபயாடிக்ஸ் பாக்டீரியாவைக் கொல்லுறதுக்கு மட்டும்தான். தேவையில்லாம ஆன்டிபயாடிக் எடுத்தா, நம்ம உடம்புக்குதான் கெடுதல்.
இந்த மாதிரி வீட்ல இருந்துகிட்டே சுலபமாக செய்யக்கூடிய இயற்கை நிவாரணங்கள பின்பற்றினாலே இந்த சளி, இருமல், காய்ச்சல் மூனையும் சீக்கிரமா கடந்து வந்துரலாம்.
வருமுன் காப்போம்! – சளியை எப்படி தள்ளி வைக்கிறது?
சளி, இருமல், காய்ச்சல் வராம இருக்க, நாம சில முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
- கை சுத்தம், உயிர் சுத்தம்: இதுதான் முதல் படி. வெளிய போயிட்டு வந்தா, சாப்பிடுறதுக்கு முன்னாடி, குறைஞ்சது 20 செகண்டுக்கு சோப் போட்டு நல்லா கையக் கழுவுங்க, ஏன்னா வைரஸ்கள் பெரும்பாலும் கைகள் வழியா தான் பரவுதான்.
- முகத்தைத் தொடாதீங்க: நம்மள அறியாமலேயே கைய வெச்சு கண்ணு, மூக்கு, வாயைத் தொடுவோம். இந்தக் பழக்கத்தை விட்டாலே, பாதி நோயைத் தடுத்திரலாம். முகத்தை, குறிப்பாக மூக்கு, வாய், கண்களை தொடவே கூடாது, ஏன்னா இந்த உறுப்புகள் வழியா வைரஸ் உடம்புக்குள்ள நுழையும்.
- பாதுகாப்பான தும்மல்: தும்மும்போதோ, இருமும்போதோ கைக்குட்டையாலயோ இல்ல உங்க முழங்கையாலயோ வாயை மூடிக்கோங்க. இது வைரஸ் காத்துல பரவுறதைக் குறைக்கும்..
மொத்தத்தில் விஷயம் இதுதான்! உடம்போட செய்தி: சரியா புரிஞ்சுக்கோங்க
சளி, இருமல், காய்ச்சல் இது எல்லாம் நாம எல்லாருமே வாழ்க்கையில பலமுறை சந்திக்கிற பொதுவான பிரச்சனைகள் தான். ஆனாலும், எப்போலாம் இவை வருதோ அப்போல்லாம் அப்படியே புறக்கணிச்சுட கூடாது. காரணம், சில நேரங்கள்ல இவை சாதாரண வைரஸா இல்லாம, உடம்புக்குள்ளே இருக்கிற பெரிய கோளாறுகளுக்கு முன் எச்சரிக்கையாக இருக்கலாம்.
அதனால, சளி வந்த உடனே தானா போயிடும்னு விட்டுடாம, நமக்கு ஏற்படும் மாற்றங்கள கவனிக்கணும். மூச்சு வாங்க சிரமமா இருக்கு, காய்ச்சல் குறையாம இருக்கு, இருமல் சளி நாளுக்கு நாள் அதிகமா இருக்கு அப்படின்னா, கண்டிப்பா மருத்துவர பாக்குறது நல்லது.
அதே நேரத்துல, நாம செய்ய வேண்டிய சில விஷயங்களையும் தவறாம செய்யணும் — நல்லா தண்ணி குடிக்கணும், ஓய்வு எடுக்கணும், சுத்தமான சூழ்நிலையில இருக்கணும், ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடணும், மற்றவர்களுக்கு பரவாம இருக்க முக கவசம் போடணும்.
மொத்தத்துல, சளி, காய்ச்சல்ங்கிறது நம்ம உடம்பு நமக்குக் கொடுக்குற ஒரு செய்தி. நம்ம உடம்பு ஒரு பெரிய பொக்கிஷம். அதனால, அது குடுக்கிற சின்ன சின்ன அறிகுறிகள புரிஞ்சுகிட்டு உடம்புக்குத் தேவையான ஓய்வையும், கவனிப்பையும் கொடுத்து சமாளிக்க தெரிஞ்சா, பெரிய பிரச்சனைகளையே தடுக்கலாம். ஆனா அபாய அறிகுறிகள மட்டும் எப்பவும் மனசுல வெச்சுக்கோங்க. ஏன்னா, “சும்மா சளிதானே”ங்கிற அலட்சியம் சில சமயம் பெரிய ஆபத்துல கொண்டு போய் விட்டுடும். அடுத்தமுறை சளி, இருமல், காய்ச்சல் வந்தா, பயப்படாம, நம்மளோட ஆரோக்கிய வழிகாட்டல்கள பின்பற்றி, சரியான பராமரிப்பு செஞ்சு, சீக்கரம் குணமாகிருங்க!