
உங்கள் வாட்ஸ்அப் பகிர்தல்களில் தினமும் ஒரு பாட்டி வைத்தியக் குறிப்பாவது வந்துவிடும் அல்லது, வீட்டுப் பெரியவர்கள், ‘அந்தக் காலத்துல இதெல்லாம் சாப்பிட்டுத்தான் 100 வயசு வரைக்கும் ஆரோக்கியமா இருந்தாங்க’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறீர்கலாம்.
உண்மைதான். ஆயுர்வேதம், சித்தம் போன்ற நம்முடைய பாரம்பரிய வைத்திய முறைகளுக்குப் பின்னால் பல்லாயிரம் ஆண்டுகால அனுபவமும் அறிவும் இருக்கிறது. ஆனால், இந்தப் பிரமிப்புக்கு நடுவே, சில தவறான புரிதல்களும் காட்டுத்தீ போலப் பரவுகின்றன. இந்தப் பாரம்பரிய அறிவின் மீதான நமது மரியாதை ஒருபக்கம் இருந்தாலும், மறுபக்கம் அதுகுறித்த அரைகுறைத் தகவல்களும், தவறான நம்பிக்கைகளும் எளிதில் பரவிவிடுகின்றன. காரணம், அவைக் கேட்க எளிமையாகவும், உடனடியாகப் பலன் தரும் என்கிற தோற்றத்தைக் கொடுப்பதும்தான். ஒரு நல்ல விஷயத்துடன் கலந்திருக்கும் இந்தச் சின்னச்சின்ன தவறுகள், சில நேரங்களில் பெரிய விளைவுகளுக்கும் வழிவகுத்துவிடக்கூடும்.
எனவே, நம்முடைய நோக்கம் பாரம்பரிய மருத்துவத்தைக் குறைச் சொல்வதல்ல. மாறாக, உண்மையான அறிவியலுக்கும், வெறும் நம்பிக்கைகளுக்கும் இடையே உள்ள மெல்லிய கோட்டைப் புரிந்துகொள்வதே ஆகும். உண்மையான அறிவை, புனைவுகளிலிருந்து பிரித்தெடுப்பதன் மூலம், இந்த மருத்துவ முறைகளின் பலனை நாம் முழுமையாகவும் பாதுகாப்பாகவும் அடைய முடியும். வாருங்கள், அந்தப் பயணத்தை இங்கிருந்து தொடங்குவோம். இந்தப் பதிவில், நாம் பரவலாகக் கேள்விப்படும் சில பாரம்பரிய வைத்தியம் பற்றிய கட்டுக்கதைகள் (myths about traditional medicine) மற்றும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளைப் பற்றிப் பேசப்போகிறோம்.
நம்மிடம் புழங்கும் எண்ணற்ற பாரம்பரிய வைத்தியம் கட்டுக்கதைகள் (traditional medicine myths) மத்தியில், மிகவும் பொதுவான ஒன்றிலிருந்து இந்த உரையாடலைத் தொடங்கலாம்.
இயற்கை வைத்தியம்: மெதுவானது, ஆனால் பாதுகாப்பானதா?
‘பாட்டி வைத்தியம்னா மெதுவாத்தான் குணமாகும்’ என்பதும், ‘இயற்கையானது, அதனால் எந்தப் பக்கவிளைவும் வராது’ என்பதும் நாம் அடிக்கடி கேட்கும் இரண்டு வாதங்கள். இவை இரண்டுமே நாம் முதலில் உடைக்க வேண்டிய முக்கியமான பாரம்பரிய வைத்தியம் கட்டுக்கதைகள்.
முதலில், வேகம்பற்றிய விஷயத்துக்கு வருவோம். உண்மைதான், சில நாள்பட்ட நோய்களுக்கு, அதன் மூல காரணத்தைச் சரிசெய்யப் பாரம்பரிய மருத்துவம் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால், தொண்டையில் ஏற்படும் சாதாரண ‘கிச்-கிச்’ தொந்தரவுக்கு, மிளகு ரசம் உடனடியாக வேலைச் செய்யும். அப்படியென்றால், எல்லாப் பாரம்பரிய சிகிச்சைகளும் மெதுவானவை என்று மொத்தமாகச் சொல்லிவிட முடியாது.
அடுத்தது, ‘இயற்கை = பாதுகாப்பு’ என்ற நம்பிக்கை. இதுதான் கொஞ்சம் அபாயகரமானது. மூலிகைகள் இயற்கையானவை, அதனால் பாதுகாப்பானவை’ என்ற எண்ணத்தில், பலரும் சுயமாக வைத்தியம் செய்துகொள்கிறார்கள். ஆனால், ஒரு சின்ன மூலிகைச் செடியில் கூட 200-க்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் இருக்கலாம். அதில் எது, எவ்வளவு நம் உடலுக்கு வேண்டும் என்று தெரியாமல், நாமே மருத்துவர் நம் விருப்பம்போல் மருந்து எடுத்துக்கொண்டால் என்ன ஆகும், அளவு தவறினால் அமிர்தமும் நஞ்சு என்பது எல்லா மருந்துக்கும் பொதுவான விதி.
ஒரு சிகிச்சை முழுமையாக வெற்றிபெற நான்கு விஷயங்கள் சரியாக இணைய வேண்டும் என்கிறது மருத்துவ சாஸ்திரம் (shastram). அவை: சரியான மருத்துவர், ஒத்துழைக்கும் நோயாளி, அக்கறையுள்ள பராமரிப்பாளர், மற்றும் துல்லியமான மருந்து. இதை ஒரு காரின் நான்கு டயர்கள் போல யோசித்துப் பாருங்கள். ஒன்றில் காற்று குறைந்தாலும் பயணம் தடைப்படும்தானே, அதுபோலத்தான் இதுவும்.
ஆக, சிகிச்சையின் வேகம் மற்றும் பாதுகாப்பு குறித்த இந்த இரண்டு கருத்துகளும் நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டிய பாரம்பரிய வைத்தியம் கட்டுக்கதைகள் (traditional medicine myths) ஆகும். இப்போது இவற்றுக்கான ஒரு தெளிவு கிடைத்திருக்கும். அடுத்து, இந்த மருத்துவ முறைகளுக்குப் பின்னால் அறிவியல் இருக்கிறதா இல்லையா என்று கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம்.
பாரம்பரிய மருத்துவம்: வெறும் நம்பிக்கையா… பின்னணியில் அறிவியலா
“இதிலெல்லாம் என்னங்க அறிவியல் இருக்கு? எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.” – இப்படிச் சொல்பவர்களை நாம் அடிக்கடி சந்தித்திருப்போம். உண்மையில், இதுவும் பரவலாக நம்பப்படும் ஒரு முக்கியமான பாரம்பரிய வைத்தியம் பற்றிய கட்டுக்கதைத் தான்.
ஆயுர்வேதத்தை (Ayurveda) ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோமே. அது வெறும் நம்பிக்கையை மட்டும் சார்ந்து இயங்குகிறதா என்றால் இல்லை. அது ஒரு முழுமையான, அறிவியல் அடிப்படையிலான வழிமுறை (Science-based Methodology). ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் அந்தக் காலத்திலேயே உடற்கூறியல் (Anatomy), உடலியல் (Physiology), நோயியல் (Pathology) என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு விரிவான அமைப்பாகத்தான் அது உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் மையமே திரிதோஷ தத்துவம் (Tridosha Philosophy) தான். அதாவது, வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான விகிதத்தில், சமநிலையில் இருக்க வேண்டும் என்பது. கேட்க எளிமையாக இருக்கிறதா என்றால் நவீன அறிவியல் இதைத்தான் ‘ஹோமியோஸ்டேசிஸ்’ (Homeostasis) என்று கொஞ்சம் வித்தியாசமாகச் சொல்கிறது. அதாவது, உடலின் உள்சூழல் தன்னைத்தானே சீராக வைத்துக்கொள்வது! கருத்து ஒன்றுதான், பெயர்கள்தான் வேறு.
இன்னும் கொஞ்சம் மருத்துவ ரீதியாகப் போனால், குறிப்பாக மருத்துவ மாணவர்களுக்கு (Medical Students) இது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். ஆயுர்வேதம் குறிப்பிடும் வாதத்தின் (Vata) செயல்பாடுகளை, இன்றைய நவீன அறிவியல் பேசும் நரம்பியக்கடத்திகளின் (Neurotransmitters) வேலைகளோடு நம்மால் ஒப்பிட முடிகிறது. அதேபோல, பித்தத்தின் (Pitta) செயல்பாடுகளை லிப்பிட் வளர்சிதை மாற்றம் (Lipid Metabolism) உடன் எளிதாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, எந்த ஆய்வு அறிக்கையும் இல்லாமல், நம் முன்னோர்கள் உடலின் செயல்பாடுகளை எவ்வளவு துல்லியமாகக் கவனித்திருக்கிறார்கள் பாருங்கள்!
‘சரி, இதெல்லாம் நாம் சொல்வது. உலக அளவில் இதற்கு அங்கீகாரம் உண்டா?’ என்று நீங்கள் கேட்டால், அதற்கும் பதில் இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பே (WHO) பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. “பாரம்பரிய மூலிகை மருந்துகளின் பயன்பாடு நீண்ட வரலாறு கொண்டது; அவைப் பாதுகாப்பானவை மற்றும் பயனுள்ளவை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று அவர்களே குறிப்பிடுகிறார்கள். ஆக, இதுவும் முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்களால் கையாளப்படும் ஒரு முறையான மருத்துவ நடைமுறைதான்.
கறிகாயும் கசாயமும் மட்டும்தானா?
பாரம்பரிய மருத்துவத்துக்குப் பின்னால் ஒரு முறையான அறிவியல் இருக்கிறது என்பதைப் பார்த்தோம். இப்போது, அதன் உணவுமுறைகள் மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள்பற்றி நிலவும் மேலும் சில சுவாரஸ்யமான பாரம்பரிய வைத்தியம் கட்டுக்கதைகள் (traditional medicine myths) குறித்துப் பார்ப்போமா?
பாரம்பரிய வைத்தியம் என்றால் அது முழுமையான சைவ உணவு முறை என்றும் அசைவத்துக்கு அங்கே அனுமதியில்லை என்ற தடை இருக்கும் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை. இது உண்மையா என்றால் இல்லை. சில சிகிச்சைகளில், ஆயுர்வேத மருத்துவர்களே மருத்துவ குணங்களுக்காகப் பூண்டு (Garlic), வெங்காயம் (Onion) போன்றவற்றைச் சிபாரிசு செய்வதுண்டு. அதுமட்டுமல்ல, சில நேரங்களில் உடலில் இரும்புச்சத்தைச் சமநிலைப்படுத்தவோ, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடவோ குறிப்பிட்ட அளவில் இறைச்சிப் பொருட்கள் (Meat Products) கூட அவசியமாகிறது.
இதனோடு ஒட்டி வரும் அடுத்த ஒரு கட்டுக்கதை, இது முழுக்க முழுக்க மூலிகைகளை மட்டுமே நம்பியிருக்கும் மருத்துவம் என்பது. உண்மையில், ஆயுர்வேத மருந்துகள் (Ayurvedic Medicines) வெறும் மூலிகைகளை (Herbs) மட்டும் கொண்ட கலவை அல்ல. அதன் வீரியத்தையும், அது உடலில் சேரும் விதத்தையும் மேம்படுத்த, அதனுடன் பால் (Milk), தேன் (Honey), நெய் (Ghee) போன்றவையும், சில சமயம் தங்கம், வெள்ளி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தாதுக்கள் (Minerals) கூடச் சேர்க்கப்படுகின்றன. இது ஒரு நுட்பமான கலவை(formulation).
ஆக, உணவு மற்றும் மருந்துப் பொருட்கள்குறித்த இந்தத் தவறான பிம்பங்களைத் தெளிவுபடுத்திக்கொண்ட பிறகு, ஒட்டுமொத்தமாக நாம் கற்றுக்கொண்ட விஷயங்களைத் தொகுத்து, இந்த மருத்துவ முறைகளைப் பாதுகாப்பாக அணுகுவது எப்படி என்று அடுத்ததாகப் பார்க்கலாம்.
மேலும் வாசிக்க : உடற்பயிற்சி: நம்பப்படும் பொய்கள், நம்பமுடியாத உண்மைகள்
ஆக, நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?
இவ்வளவு தூரம் பேசியதிலிருந்து, பாரம்பரிய வைத்தியம் பற்றிய கட்டுக்கதைகள் பலவற்றுக்கு ஒரு தெளிவு கிடைத்திருக்கும் என நம்புகிறோம். பாரம்பரிய மருத்துவம் என்பது அறிவியலுக்கு எதிரானது அல்ல; அதன் வேகம் நோயைப் பொறுத்து மாறுபடும்; அது நூற்றுக்கு நூறு (100) பாதுகாப்பானது அல்ல; அதன் உணவு முறைகளும் எப்போதும் பத்தியம் சார்ந்த கடுமையானவை அல்ல என்பதை இப்போது புரிந்துகொண்டிருப்போம்.
அப்படியென்றால், நவீன மருத்துவத்துக்கு (Modern Medicine) இது ஒரு போட்டியாளரா? இல்லவே இல்லை. அதை ஒரு ஜுகல்பந்தி (jugalbandi – ஒருவகை இணைந்த இசை நிகழ்ச்சி) போல யோசித்துப் பாருங்கள். இரண்டும் சேரும்போது ஆரோக்கியம் எனும் இசை இன்னும் இனிமையாக இருக்கும். பாரம்பரிய மருத்துவத்தை (Traditional Medicine) ஒரு மிகச்சிறந்த துணைக்கருவியாகப் (complementary tool) பார்ப்பதே சரி.
ஆனால், இங்கேதான் ஒரு முக்கியமான நிபந்தனைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வாட்ஸ்அப் பகிர்தல்களையோ, கூகுள் தேடலையோ நம்பி சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது (Self-Treatment) என்பது, லைசென்ஸ் இல்லாமல் நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டுவதற்குச் சமம். விபத்து நிச்சயம். எனவே, இதுகுறித்து உங்களுக்கு ஒரு சின்ன சந்தேகம் எழுந்தாலும் தயங்க வேண்டாம். உடனடியாக ஒரு தகுதிவாய்ந்த மருத்துவரை அணுகி (Consult a certified/licensed practitioner), உங்கள் கேள்விகளைக் கேட்டுத் தெளிவு பெறுவதே புத்திசாலித்தனமான, பாதுகாப்பான வழி.