
நம்ம வீட்டுல ஒரு குழந்தை பொறந்துட்டா, நம்ம உலகமே அந்தப் குழந்தையை சுத்தி தான் இருக்கும். நம்ம குழந்தைகளுக்கு ஒரு சின்னக் பிரெச்சனைனா கூட நாம ரொம்ப கலங்கிருவோம். இப்படி பார்த்து பார்த்து வளத்துற நம்ம குழந்தைகள, கண்ணுக்கே தெரியாத எத்தனையோ நோய்க் கிருமிங்க தாக்க காத்துக்கிட்டு இருக்கு. அதுகிட்ட இருந்து நம்ம குழந்தைகள காப்பாத்துற ஒரு அருமையான விஷயம் தான் தடுப்பூசி!
முன்னாடி காலத்தில அம்மை புள்ளி (smallpox), கண்வீச்சு (measles), பொலியோ (polio) மாதிரி பல நோய்கள் மக்களுக்கு தொற்றி நிறைய உயிரிழப்புகள ஏற்படுத்துச்சு. இப்போ பெரும்பாலும் தொற்று நோய்கள் குறைஞ்சு போனதுக்கு ஒரு முக்கிய காரணம் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் திட்டம் தான்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் ஒரு மாதிரி வலியற்ற பயிற்சியை நம்ம உடம்புக்கு தருது. நோய் வரதுக்குள்ள, நம்ம உடம்பு அதக் கண்டுபிடிக்க கத்துக்கிட்டு, போராட தயாரா இருக்க வைக்குது. தடுப்பூசி இல்லாம ஒரு நோய் வந்தா, உடம்பு அந்த நோயை எதிர்க்க கஷ்டப்படும். ஆனா தடுப்பூசி எடுத்தா, அந்த நோய் வந்தாலும் உடம்பு அதை சுலபமா முறியடிக்கும்.
உங்க மனசுல தடுப்பூசிகள் பத்தி ஓடுற எல்லா சந்தேகங்களையும் இந்த கட்டுரைல பாப்போம். நம்ம குழந்தைகளுக்கு நோயே இல்லாத வாழ்க்கைய கொடுப்போம்!
குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை… ஏன் இவ்ளோ முக்கியமா பின்பற்றனும்
பெரியவர்கள் உடம்பு கொஞ்சம் சக்தியாக இருக்கும். ஆனா குழந்தைகளுக்கு பிறந்ததிலிருந்தே நோய்கள் தாக்க எளிதான நிலை இருக்கும். நோய் வந்தா பாதிப்பும் பெரிய அளவுல இருக்க வாய்ப்பு உண்டு. சில நோய்கள்வந்தா, முழுசா குணமாக முடியாதவையாக கூட இருக்கலாம். அதனால, குழந்தைகளை ரொம்ப கவனமா பாத்துக்கணும்.
இந்தத் தடுப்பூசி போடுற அட்டவனைக்கு பின்னால பெரிய அறிவியல் இருக்கு.
சரியான நேரத்துல போட்டாதான் சக்தி அதிகம்:
குழந்தைகளோட உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுறதுக்கு இந்த நேரம் ரொம்ப முக்கியம். எந்த மாசத்துல போட்டா, அந்த ஊசியை உடம்பு ஏத்துக்கிட்டு, நோய்க்கு எதிரான ‘ஆன்டிபாடி’ங்குற சுய பாதுகாப்ப உருவாக்கும்னு பார்த்துதான் இந்த அட்டவணைய தயாரிச்சுருக்காங்க.
ஆபத்து வர்றதுக்கு முன்னாடியே தடுத்தாகணும்:
சில நோயெல்லாம், பொறந்த கொஞ்ச மாசத்துலயே குழந்தைகள தாக்கக்கூடியது. ஏன்னா, அப்போதான் அவங்க உடம்பு ரொம்ப மென்மையா இருக்கும். ஆபத்து வர்றதுக்கு முன்னாடியே, நம்ம புள்ளைங்களோட உடம்பை கிருமிகள் அண்டாத அளவுக்கு தயாராக்கி வைக்கிறதுதான் இந்த அட்டவணையின் முக்கிய வேலையே.
எல்லா குழந்தைகளும் நல்ல பாதுகாப்பு:
நீங்க உங்க குழந்தைக்கு ஊசி போடுறது, உங்க குழந்தைய மட்டும் காப்பாத்தல. ஊசி போட்டுக்க முடியாத நிலைமையில உடம்புக்கு முடியாம இருக்குற மத்த குழந்தைகளையும், நம்ம தெருவுல, ஊருல இருக்குற எல்லாரையுமே காப்பாத்துறீங்க. ஊர்ல எல்லா குழந்தைகளும் தடுப்பூசி போட்டிருந்தா, நோயால சீக்கிரத்துல பரவ முடியாது.
தடுப்பூசிகள் போடவேண்டிய முக்கியத்துவம் பத்தி ஓரளவுக்கு புரிஞ்சுருக்கும். அடுத்தது, எந்தெந்த தடுப்பூசிகள் எப்போப்போ போடணும்னு அட்டவணையை பத்தி பாத்துரலாம்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் – அட்டவணை வரிசையில்
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்னு ஒரு பெரிய பட்டியலே இருக்கு. இது ஒண்ணும் ஒரே நாள்ல நடக்குற விஷயம் இல்ல. நம்ம குழந்தைகள் வளர வளர, ஒவ்வொரு நிலையிலும் அவங்க தேவைக்கேற்ப கொஞ்சம் கொஞ்சமா பாதுகாப்பு கொடுக்கிற ஒரு அத்தியாவசியமான திட்டம் தான் இது. ஒவ்வொரு வயசுலயும் சரியான தடுப்பூசியைப் போட்டு, நோயே அண்ட முடியாத அளவுக்கு ஒரு பலமான பாதுகாப்பு வளையத்தை நாம உருவாக்கணும்.
நம்ம குழந்தைகள் பொறந்ததுல இருந்து பருவ வயது வரைக்கும் கொடுக்கக்கூடிய குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் எந்தெந்த வயசுல என்னென்னன்னு ஒண்ணொண்ணா பார்க்கலாம்:
பிறந்தது முதல் ஆறு மாசம் வரை:
பொறந்த 24 மணி நேரத்துக்குள்ளயே போடப்படுற ஹெபடைடிஸ் (HepB) ஊசி, அவங்க ஈரலைக் காக்கிறது. கூடவே, சளி, இருமல் முத்திப்போய் நிமோனியா வராம தடுக்கிற ஆர்.எஸ்.வி (RSV) ஆன்டிபாடியும் தேவைப்பட்டா கொடுப்பாங்க.
ரெண்டு மாசம் ஆனதும், நம்ம குழந்தைக்கு ஒரு பெரிய பாதுகாப்பு வளையத்தையே உருவாக்குறோம். தொண்டை அடைப்பான், ரண ஜன்னி, கக்குவான் இருமலுக்கான DTaP, இளம்பிள்ளை வாதத்துக்கான IPV, மூளைக்காய்ச்சலுக்கான Hib, நிமோனியாவுக்கான PCVனு ஒரு படையையே அவங்க உடம்புல தயார் பண்றோம். கூடவே, வயித்துப் போக்கைத் தடுக்க ரோட்டா வைரஸ் சொட்டு மருந்தும் உண்டு.
10 வாரங்களில் மீண்டும் DTaP, IPV, Hib, Hepatitis B ஆகியவை இரண்டாம் டோஸாக கொடுக்கப்பட வேண்டும். அதேபோல, RV மற்றும் PCV தடுப்பூசியின் இரண்டாம் டோஸ்களும் இந்த கட்டத்திலே அடங்கும். 14 வாரங்கள் ஆனதும், இதே தடுப்பூசிகளின் மூன்றாவது டோஸ்கள் தொடர்ந்து கொடுக்கப்பட வேண்டும். இவை இடைவெளி ஏற்படாமல் வழங்கப்பட வேண்டும், ஏனெனில் தடுப்பூசியின் முழு தாக்கத்தை உடம்பு பெறுவதற்கு இது அவசியம்.
6 மாதங்கள் ஆனதும் Hepatitis B தடுப்பூசியின் மூன்றாவது மற்றும் இறுதி டோஸும் கொடுக்கப்பட வேண்டும். குறிப்பாக அதிக ஆபத்து உள்ள குழந்தைகளுக்கு இன்ப்ளூயன்சா தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது, குறிப்பாக மழைக்காலங்களில் இது தேவைப்படும். ரெண்டாவது மாசப் பாதுகாப்பு, நாலாவது மாசத்துல ஒரு மேம்பாடு அடைஞ்சு, ஆறாவது மாசத்துல இன்னும் வலுவா மாறுது. இதே காலகட்டத்துல தான், வருஷா வருஷம் போட வேண்டிய ஃப்ளூ ஊசி மற்றும் கோவிட்-19 ஊசி பயணமும் தொடங்குது.
9 மாதத்தில் முக்கியமான தடுப்பூசி MMR ஆகும். இது மீசில்ஸ், மம்ப்ஸ் மற்றும் ருபெல்லா என்ற மூன்று வைரஸ் நோய்களை தடுக்கும். இதில் இணையாக டைபாய்டு தடுப்பூசி (Typhoid Conjugate Vaccine) ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
ஒரு வயசு முதல் நான்கு வயசு வரை:
நம்ம குழந்தை நடக்க ஆரம்பிச்சு, கையில கிடைக்கிறதையெல்லாம் எடுத்து வாயில வைக்கிற நேரம் இது. அதனால, இந்த வயசுல பாதுகாப்பு இன்னும் அதிகமாத் தேவை. தட்டம்மை, புட்டாளம்மை, ரூபெல்லா மாதிரியான நோய்களைத் தடுக்க MMR ஊசியும், நம்ம ஊரு சின்னம்மை வராம இருக்க வாரிகெல்லா (VAR) ஊசியும் இந்த வயசுல தான் போடப்படுது. இதோட, சாப்பாடு, தண்ணி மூலமா பரவுற மஞ்சள் காமாலையைத் தடுக்க ஹெபடைடிஸ் ஏ (HepA) ஊசியோட முதல் டோஸும், ஏற்கெனவே போட்ட DTaP, Hib, PCV ஊசிகளோட பூஸ்டர் டோஸும் போடப்படும். இது, உங்க குழந்தைகள் பயமில்லாம உலகத்தைச் சுத்திப் பார்க்க உதவும்.
16 முதல் 18 மாதங்களுக்கு இடையில் DTaP, Hib, IPV ஆகியவை Booster டோஸாக வழங்கப்பட வேண்டும். இதில் கூடுதலாக Hepatitis A தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் சேரும்.
2 வயதிலிருந்து 5 வயது வரை ஆண்டுதோறும் ஒரு தடவை மழைக்காலத் தீவிர நோய்கள் எதிர்ப்புக்காக இன்ப்ளூயன்சா தடுப்பூசி கொடுக்கப்பட வேண்டும். 2.5 வயதில் டைபாய்டு பூஸ்டர் (Typhoid Booster) டோஸ் வழங்கப்பட வேண்டும். சில குழந்தைகளுக்கு MMR தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பரிந்துரைக்கப்படலாம், குறிப்பாக சிறப்பு மருத்துவ ஆலோசனை இருந்தால்.
நாலு வயசு முதல் ஆறு வயசு வரை:
நம்ம குழந்தைகள் நம்மளையும் நம்ம வீட்டையும் கொஞ்சம் பிரிஞ்சு வெளில போக தயாராகுற நேரம் இது. கிண்டர்கார்டன், ப்ளே ஸ்கூல்னு பத்து பிள்ளைகளோட சேர்ந்து விளையாடப் போறாங்க. அதனால, அவங்களோட நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு பெரிய மேம்பாடு தேவை. ஏற்கெனவே போட்ட தடுப்பூசிகளோட சக்தியை அதிகப்படுத்த, DTaP, IPV, MMR, வாரிகெல்லா ஊசிகளோட பூஸ்டர் டோஸ்கள் இந்த வயசுல போடப்படும். இது, பள்ளில நோய்த்தொற்று எதுவும் வராம, ஜாலியா பாடம் படிக்கவும், விளையாடவும் நம்ம குழந்தைகளுக்கு தைரியத்தைக் கொடுக்கும்.
பதின் பருவம் (11 முதல் 16 வயசு வரை): எதிர்காலத்துக்கான பாதுகாப்பு!
நம்ம குழந்தைங்க வளர்ந்து, பெரியவங்களா ஆகிட்டாங்கன்னு நினைக்கிற இந்த பருவ வயசுல, அவங்க எதிர்கால ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில முக்கியமான ஊசிகள் இருக்கு. Tdap பூஸ்டர், ரண ஜன்னியில இருந்து தொடர்ந்து பாதுகாக்கும். மிக முக்கியமா, பெண் குழந்தைகளுக்குப் பிற்காலத்துல கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராம தடுக்கிற HPV ஊசியை மறக்கவே கூடாது. இது ஆண் குழந்தைகளுக்கும் சில புற்றுநோய்கள் வராம தடுக்கும். இதோட, மூளைக்காய்ச்சல் வராம இருக்க மெனிஞ்சோகோகல் ஊசியும், அதோட பூஸ்டர் டோஸும் இந்த காலகட்டத்துல போடப்படும். இது, அவங்க கல்லூரி போகும்போதும், வெளியில தங்கிப் படிக்கும்போதும் ஒரு பெரிய பாதுகாப்பா இருக்கும். இது அவங்க ஆரோக்கியத்துக்கான ஒரு நீண்ட கால முதலீடு
இப்போ நம்ம குழந்தைகளுக்கு பிறந்துல இருந்து பருவ வயது வர நாம கொடுக்க வேண்டிய தபடுப்பூசிகள் என்னனா, எந்த நேரத்துல கொடுக்குணும், என்னென்ன நோய்கள் இதனால தடுக்கப்படுதுனு இப்போ ஒரு புரிதால் கிடைச்சுருக்கும். அடுத்து இந்த தடுப்பூசிகள் நம்ம சமூக கடமையம் பொறுப்பும் வாய்ந்தது எப்படினு பாப்போம்.
தடுப்பூசிகளை பின்பற்றுவது – சமூக பொறுப்பும் கூட!
தடுப்பூசி போடுவதால் குழந்தைகள் காய்ச்சல் வந்து அவதிப்படுறாங்க இதோட மேலும் சில வியாதிகள் வரும்னு பல தவறான கருத்துகள் இருக்கு. தடுப்பூசியால் சிறிய அளவிலான காய்ச்சல், வீக்கம், தேங்கைபோல் கட்டி போன்றவை வரலாம், ஆனால் அது சகஜம்தான், கவலையில்லாமல் இருக்கலாம். அதே நேரத்தில், தடுப்பூசி, தானாகவே தனிமைப்படும் குழந்தை வளர்ச்சி நிலையான ஆட்டிசம் (Autism) வரக்காரணம் என்பதெல்லாம் எந்த உண்மையும் இல்லாத தவறான கருத்துகள். இவை பல தடவைகள் அறிவியல் ரீதியாக மறுக்கப்பட்டிருக்கிறது.
நாம் பயன்படுத்தும் தடுப்பூசிகள் அனைத்தும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் [FDA (Food and Drug Administration)], உலக சுகாதார மையம் [WHO (World Health Organization)], நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் [CDC (Centers for Disease Control and Prevention)] போன்ற உலகத்தர மருத்துவ அமைப்புகளால் பரிசோதிக்கப்பட்டு, பாதுகாப்பானவையாகவே ஒப்புதல் பெற்றவை.
ஒவ்வொரு தடுப்பூசியையும் அதற்கான சரியான நேரத்திலேயே கொடுக்க வேண்டும்ன்றது ரொம்ப முக்கியமானது. காரணம், தடுப்பூசியின் தாக்கம் அதிகம் இருக்க வேண்டுமானால் அதன் நேரம் மிக முக்கியம். தடுப்பூசியை தவற விட்டால், அதற்கான மாற்றுத் திட்டமும் (catch-up schedule) இருக்கு. ஆனால் அதை மருத்துவரோட ஆலோசனையோட தான் பின்பற்றணும்.
தடுப்பூசிகளை தவிர்த்தால், குழந்தைக்கு நோய் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கலாம். அதோடு, நோய் வந்த பிறகு அதன் சிகிச்சைக்கான மருத்துவ செலவுகள் மோசமாக உயரக்கூடும். முக்கியமாக, தடுப்பூசி இல்லாமல் ஒரு குழந்தைக்கு தொற்று வந்துவிட்டால், அது அருகிலிருக்கும் மற்ற குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும். இது நம்ம வீட்டுக் குழந்தையோட மட்டுமல்ல; பள்ளி, பிளேஸ்கூல், கிராம சுகாதார நிலையம் எல்லாத்திற்கும் பெரிய பிரச்சனை உருவாக்கும். சில நோய்கள் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. எடுத்துக்காட்டாக, மீசில்ஸ் (Measles) என்பது சில நேரங்களில் குழந்தை மூளையைப் பாதிக்கக்கூடியது; ஹெபடைடிட்டிஸ் B (Hepatitis B) பாதிப்புகள் சில நேரங்களில் கருப்பை மற்றும் கல்லீரலுக்கு புற்றுநோயாக மாறக்கூடும்; அதேபோல போலியோ (Polio) வந்தால், குழந்தையின் முழு உடலும் ஊனமுற்றதாகி வாழ்நாள் முழுக்க பாதிப்போடு வாழ வேண்டிய நிலைக்கு இட்டுச் செல்லும்.
தடுப்பூசி என்பது தனிப்பட்ட பாதுகாப்பை மட்டுமல்லாம சமூக பாதுகாப்பையும் உருவாக்கும். நம்ம ஒரு பெற்றோரா நம்ம குழந்தைக்கு மட்டும் பாதுகாப்பு கிடைக்கணும்னு சிந்திப்பது போதாது, மற்ற குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டுமேன்னு சிந்திக்கணும். அதாவது, நம்ம வீட்டு குழந்தைக்கு உடல் நலக் குறைவு காரணமா ஒரு தடுப்பூசி கொடுக்க முடியலன்னாலும், மற்ற எல்லா பசங்களும் தடுப்பூசி எடுத்திருந்தா, அந்த நோய் பரவ வாய்ப்பு குறைவாகி, நம்ம குழந்தை கூட பாதுகாப்பாக இருப்பாங்க. இது ஒரு பெரிய சமூக நன்மை! நம்ம குழந்தைக்கு மட்டுமல்ல, “மற்ற குழந்தைகளுக்கும் பாதுகாப்பு” கிடைக்கணும் அப்படின்னா, நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை திட்டத்தை பின்பற்றனும். இதை தான் மொத்த சமூக நோய் எதிர்ப்பு சக்தினு (“herd immunity”) சொல்வாங்க. பொதுவாக 90% மேல் குழந்தைகள் தடுப்பூசி எடுத்தா தான், அந்த நோய்கள் வேகமா பரவாம தடுக்க முடியும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள்: அடிக்கடி வர பொதுவான சந்தேகங்களுக்கான பதில்கள்
தடுப்பூசிகள் குறித்து பெரும்பாலான பெற்றோர்களுக்கும் ஏராளமான கேள்விகள் இருக்கும். பல சந்தேகங்கள் மனத்தில் தோன்றலாம். அந்த சந்தேகங்களுக்கு தெளிவான பதில்கள இப்போ இந்த பகுதில பாக்கலாம்.
தடுப்பூசியால் குழந்தைக்கு பக்க விளைவுகள் வருமா?
இது பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி தான். தடுப்பூசியுக்குப் பிறகு குழந்தைக்கு சிறிய அளவிலான காய்ச்சல் வந்தாலும் அதற்குப் பயப்பட வேண்டாம். ஊசி போட்ட இடத்தில் சற்று வீக்கம், சிவத்தல், அல்லது சிறிது வலி ஏற்படலாம். இது சில நாட்களிலேயே இயல்பாகக் குறைந்து விடும். இவை எல்லாம் உடம்பு அந்த தடுப்பூசியைப் பெற்றுவிட்டு செயல்படுகிறது என்பதற்கான அறிகுறிகள் தான்.
மிகக் குறைவான சந்தர்ப்பங்களில் மட்டுமே தடுப்பூசியால் அலர்ஜி போன்ற கடுமையான எதிர்வினைகள் ஏற்படும். ஆனால், மருத்துவமனையில் தடுப்பூசி கொடுக்கும் போது குழந்தை சில நிமிடங்கள் கண்காணிக்கப்படுவது இந்த அரிதான சூழ்நிலைகளுக்காக தான். அவ்வளவுதான், பயப்பட தேவையில்லை.
ஒரே நேரத்துல ரெண்டு மூணு ஊசி போடுறாங்களே, குழந்தை தாங்குமா?
கண்டிப்பா தாங்கும்! இன்னைக்கு வர்ற ஊசிங்க ரொம்பப் பாதுகாப்பானது. ஒரு குழந்தை ஒரு நாளைக்கு விளையாட்டுல கீழ விழுந்து எழுந்து, ஆயிரக்கணக்கான கிருமிகளைச் சந்திக்குது. அதோட ஒப்பிடும்போது, இந்த ஊசியில இருக்குற கிருமியோட அளவு ரொம்ப ரொம்பக் கம்மி. ஒரே நாள்ல எல்லா ஊசியையும் போடுறதுனால, உங்களுக்கு அடிக்கடி ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடக்குற வேலையும் மிச்சம், குழந்தைக்கு சரியான நேரத்துல பாதுகாப்பும் கிடைச்சிடும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையில் தவற விட்ட தடுப்பூசியை எப்போது கொடுக்கலாம்?
சில சமயம் ஊசி போடுற தேதியை மறக்கலாம், திட்டமிட்டு வைத்திருந்த தடுப்பூசி நாளை தவரவிடலாம். அதுக்காகக் கவலைப்பட வேண்டாம். ஆனா, அதை அசால்ட்டா மட்டும் விட்றாதீங்க. உடனே மருத்துவர் கிட்ட போய் அதப்பத்தி சொல்லுங்க. அவரு, விட்ட ஊசியை எப்போ, எப்படிப் போடணும்னு ஒரு மறுபரிசீலனை அட்டவணை (“catch-up schedule”) போட்டுக் கொடுப்பாரு. அதை பின்பற்றினா போதும். ஒரு தடவை தவறிவிட்டுட்டோம் பயப்பட வேண்டியதில்லை. ஆனால் தவற விட்டதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கே இருக்கிறது.
இயற்கையான பாதிப்பு வந்தால் போதாதா?
சிலர் தடுப்பூசி இல்லாம, இயற்கையா நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கட்டும்ன்னு நினைக்கலாம். ஆனால் உண்மையில் நோய் இயற்கையா வந்தா, பாதிப்பு மிக மோசமானதாக இருக்க வாய்ப்பு அதிகம். சில நோய்கள் உடம்பை உலுக்கி விடும். மென்மேலும் சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
தடுப்பூசியின் மூலம் உடம்பு அந்த நோயைப் பற்றி “முன்கூட்டியே” தெரிந்து தயார் நிலையில் இருப்பதால், பாதிப்பு குறைவாகவும், ஆபத்து இல்லாமலும் இருக்க முடியும். இந்த பாதுகாப்பு நிலையை இயற்கையான நோய் ஏற்படுத்தும் என்பதை விட தடுப்பூசி வழியாகப் பெறுவது மிகச் சிறந்தது.
மேலும் வாசிக்க : பொதுவான குழந்தை பருவ நோய்கள்: ஓர் அறிமுகம்
நம்ம குழந்தைகள் ஆரோக்கியம்… நம்ம கையில!
நம்ம குழந்தைகளுக்கு நோயே இல்லாத ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையைக் கொடுக்கிறது தான் நாம அவங்களுக்குக் கொடுக்கிற மிக பெரிய சொத்து. அதுக்கு இந்தத் தடுப்பூசி போடுறது ரொம்ப ரொம்ப முக்கியம்.
யாரோ வாட்ஸ்அப்ல அனுப்புறது எல்லாம் நம்பாதீங்க. உங்க மருத்துவர் சொல்றத மட்டும் காதுல வாங்குங்க. குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணைய பத்திரமா வச்சுக்கிட்டு சரியா பின்பற்றுங்க. நம்ம புள்ளைங்க கவலையே இல்லாம, சிரிச்சுக்கிட்டு, விளையாடிக்கிட்டு ஆரோக்கியமா வளரட்டும்! அதுக்கு நாம உறுதுணையா இருப்போம்